ஆழ்மனம்


Click to watch video
தினந்தோறும் நூற்றுக் கணக்கான தகவல்களை மேல் மனம் தந்தபடி இருக்க அவற்றை ஆழ்மனம் மனதில் பதித்துக் கொண்டும், ஒழுங்கு படுத்திக் கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது. ஓரிரு எண்ணங்கள் தவறாகவும், பலவீனமாகவும் உள்ளே செல்வதில் பெரிய பாதிப்பு இருக்காது. தொடர்ந்து அதே போல் எண்ணங்கள் ஆழ்மனதில் பதிய ஆரம்பித்தால் தான் பிரச்னை.
எனவே மேல்மனம் எடுத்து உள்ளே அனுப்பும் தகவல்களில் மிக கவனமாக இருங்கள். மேல்மனம் அனுப்பும் தகவல்கள் தொடர்ந்து பயம், பலவீனம், கவலை, தாழ்வு மனப்பான்மை கொண்ட எண்ணங்களாக இருந்தால் அவை பலப்பட்டு அப்படியே பதிவாகி அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகளாக உங்கள் வாழ்வில் கண்டிப்பாக வரும். அதற்கு எதிர்மாறாக தைரியம், வலிமை, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற தகவல்களாக மேல்மனம் உள்ளே தொடர்ந்து அனுப்பினால் அதுவும் அப்படியே உங்கள் நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும் என்பது உறுதி.
இப்போது ஒரு கேள்வி எல்லோர் மனதிலும் எழலாம். ஹிப்னாடிசம் மூலமாக யாரையும் எப்படியும் மாற்ற முடியுமா? அதற்கு ஒரு நிகழ்வைச் சொல்லலாம். ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு பெண்ணை ஹிப்னாடிசம் செய்து பல வியக்க வைக்கும் அற்புதங்களைச் செய்து காட்டினார். கடைசியில் அந்தப் பெண்ணை ஆடைகளைக் களையச் சொன்ன போது மட்டும் அந்தப் பெண் அப்படிச் செய்யாமல் பேசாமல் நின்றாள். "ஏன்?" என்று கேட்ட போது "அது தவறு" என்ற பதில் வந்தது.
நம் ஆழ்மனதில் முன்பே ஆழமாகப் பதிந்துள்ள நமது ஒழுக்கத்திற்கோ, நம்பிக்கைகளுக்கோ, மதிப்பீடுகளுக்கோ எதிராக யாரும் நம்மை ஹிப்னாடிசம் மூலமாக செயல்படுத்தி விட முடியாது. இதை எத்தனையோ சோதனைகள் நிரூபித்துள்ளன.
இதையெல்லாம் வைத்து யோசித்துப் பார்த்தால் நம் இன்றைய நிலைக்கு மிகப் பெரிய பொறுப்பு வகிப்பது நம் ஆழ்மனமே. இப்போதைய வாழ்க்கை நிலை போதாது என்று தோன்றினால் நாம் ஆழ்மனப் பதிவுகளை மேம்படுத்தி புதுப்பித்துக் கொள்வதே வழி.

No comments:

Blog Archive