நம்ப முடியவில்லை.

எனக்கு தெரிந்த என் கணவருடன் வேலை செய்த 40 வயதான ஒருவர் Heart Attack ல் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன். அவருக்கு ஒரேஒரு மகன். கர்நாடகாவைச்சேர்ந்தவர். பார்ப்பதற்கு இது போல ஒரு நோய் அவருக்கு இருந்தது என்று கூட சொல்லமுடியாது. இந்த விசயத்தை என்னால் நம்பவேமுடியவில்லை. இது போல நிறைய வாழ்க்கையில் நடக்கும் விசயங்களை ஜீரணிப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது.

மற்றொருவருக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் குழந்தையில்லாமல் இருந்து இந்த வருடம் ஜனவரி மாதம் ஆண்குழந்தை பிறந்தது. அவரும் ரயில் விபத்தில் பலியாகிவிட்டார்.

குறைந்த வயதுள்ளவர்கள் இறக்கும்போது அந்த இறப்பு நம் மனதில் ஒருவித வலியை வேதனையை விட்டுசெல்கிறது.

இது போல ஒன்றல்ல இரண்டல்ல. நிறைய விசயங்கள். நம்பமுடியாதவைகளாகவும் ஜீரணிக்கமுடியாதவைகளாகவும் உள்ளன.

உணர்வுகள்.

மாநாட்டு ஏற்பாடுகள் சிறப்பாக நடக்கவேண்டும் என்று தலைவர் அனைத்தையும் ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்.

மாநாட்டிற்கு எப்படி செல்வது என்று இளைஞர்கள் திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.

5 நாள் லீவாமே இந்த பிள்ளைகளை எப்படி சமாளிக்கப்போறெனோ என பிரேமா கவலைப்பட்டுகொண்டிருந்தாள்.

பிரேமாவின் கல்லூரி படிக்கும் தங்கை வனிதா மற்றும் அவள் தோழிகள் லீவில் எங்கு செல்வது என திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.

பிரேமாவின் மகன் நரேஷ் தன் நண்பனிடம் டேய் 5 நாள் லீவாமே தெரியுமா என்றான்

அப்படியா ஷையா ஜாலி என்றான் ஆலன்.

பயம்

கவிதாவிற்கு மிகவும் பயமாகயிருந்தது. தமிழ் ஆசிரியர் இன்று 10 திருக்குறளை மனப்பாடம் செய்யசொல்லியிருந்தாள்.

கவிதா அவற்றை மனப்பாடம் செய்ய மறந்துபோனாள். டிவி பார்த்துகொண்டு இருந்ததில் படிக்கவேயில்லை.

3வது பீரியட் தமிழ். முதல் 2 பீரியட் முடிந்து தமிழ் ஆசிரியரும் வந்து விட்டார். ஒவ்வொருவராக ஒப்பிக்கவும் சொல்லி ஒப்பித்துகொண்டிருந்தனர். மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டிருந்தார் தமிழ் ஆசிரியை. கவிதாவிற்கு ஒரே ஒரு குறள் மட்டும் நன்றாக தெரியும்.

மாலதியை ஒப்பிக்கசொன்னார். அவள் 5 குறளை சொன்னாள். அவளை அமர சொல்லிவிட்டு கவிதாவிடம் ஒப்பிக்க சொல்லி சொன்னார் தமிழ் ஆசிரியை. 6 வது குறளை சரியாக மிக விரைவாக சொன்னாள் கவிதா.

தமிழாசிரியர் இவ்வளவு விரைவாக சொல்கிறாயே அப்படி என்றால் நீ எல்லாவற்றையும் நன்றாக படித்திருப்பாய் உட்கார் என கூறிவிட்டார்.

நிம்மதி பெருமூச்சுவிட்டாள் கவிதா.

செயல்விளைவு

முகிலன் தன் இருக்கையில் அமர்ந்திருந்தான். இன்று நேர்முகத்தேர்வுக்கு ஆட்களை தேர்தெடுக்கவேண்டும்.

பத்துபேர் தேர்வுக்கு வந்திருந்தனர்.

ஒவ்வொருவராக அழைத்து கேள்விகளைக்கேட்டுக்கொண்டிருந்தான்.

5 பேர் முடிந்துவிட்டது. 6 வது நபரை கூப்பிட்டான். உள்ளே நுழைந்த பெண்ணை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தான்.

யாரைத் தன் வாழ்நாளில் சந்திக்க கூடாது என்று நினைத்தானோ அதே அகிலா.

அவளிடமும் எல்லா கேள்விகளும் கேட்கப்பட்டன. எல்லாவற்றிக்கும் சரியாகவே பதில் சொன்னாள். இவளை எப்படி வேலைக்கு எடுத்துக்கொள்வது. இவள் முகத்தில் தினம்தினம் விழிக்கவேண்டுமே. கடவுளே என்ன எனக்கு வந்த சோதனை என எண்ணினான்.

ஒருவாரம் கழித்து உங்களுக்கு போன் செய்கிறோம் என்று கூறினான் முகிலன்.

பலவாறாக யோசித்து அகிலாவை வேலைக்கு சேர்த்துக்கொள்வது என முடிவெடுத்தான் முகிலன். தன் உதவியாளரிடம் அவளுக்கு தொலைபேசசொன்னான் இந்த செய்திக்காக.

உதவியாளர் அவளிடம் தொடர்பு கொண்டு விட்டுசொன்னார். சார் அவர்கள் வேறொரு கம்பெனியில் சேர்ந்து விட்டார்களாம் என்றார்.

முகிலன் சந்தோசப்பட்டான். அகிலா வீட்டில் கவலையுடன் அமர்ந்துகொண்டு இருந்தாள். தன் செய்த தவறு இன்று இந்த நிலையில் தன்னை நிறுத்தியுள்ளது என எண்ணி வருந்தினாள்.
வேலையில்லாமலே வேலையில் சேர்ந்து விட்டதாக பொய் சொன்னதை நினைத்து வருந்தினாள்.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் முகிலனும் அகிலாவும் ஒரே கம்பெனியில் வேலை புரிந்துகொண்டிருந்தனர். முகிலன் முடிக்கவேண்டிய project முடிந்துவிட்டாலும் தனக்காக காத்திருக்குமாறுசொல்வாள். ஆனால் இவள் முடித்தவுடன் அவனிடம் எதுவும் சொல்லாமல் அதிகாரியிடம் சமர்ப்பித்துவிடுவாள். இவன் சீக்கிரம் வேலைசெய்யவில்லை என்றும் வத்தி வைப்பாள். அதனால் முகிலனின் வேலை பறிக்கப்பட்டது. வேலைசெய்யவில்லையெனினும் வேலைசெய்வது போல் நடிப்பாள். தான் செய்த தீயசெயலுக்காக வந்த விளைவை எண்ணி வருத்தப்பட்டாள் அகிலா.

தாய் தரும் தவறான அறிவுரை.

ஒருசில அம்மாக்கள் திருமணம் ஆனவுடன் தங்கள் மகள்களின் வாழ்வில் தேவையில்லாமல் தலையிட்டு பிரச்சினையை பெரிதாக்குகின்றனர். பிரச்சினையே இல்லாவிட்டாலும் புதிதாக உண்டுபண்ணுகின்றனர். நல்ல உறவுகளே கிடைத்தாலும் ஒரு சிலர் அதை புரிந்து கொள்ளாமல் அலட்சியப்படுத்துகின்றனர். தாய் தந்தையரே நிரந்தரம் அல்ல. எல்லா உறவுகளும் நமக்கு தேவைதான். அதை நிறைய பேர் உணர்வதில்லை.

கணவனின் உறவினர்கள் நம் மீது கொண்டுள்ள அன்பை நிறைய பேர் புரிந்துகொள்வதேயில்லை. நம் அம்மாவே தவறான அறிவுரை கூறினாலும் மகள் ஆனவள் சிந்தித்து நல்ல முடிவை எடுக்கவேண்டும். தன் குடும்ப விவரங்களை வெளியில் சொல்வது நல்லதல்ல. நிறைய திருமணமான பெண்கள் இதை கடைபிடிப்பதில்லை.

நல்ல கணவனை தவறான அறிவுரைகளால் இழந்தவர்கள் ஏராளம். உறவு வட்டங்கள் விலகிப்போவதும் இதனால்தான். சிறிய மனக்கசப்பு பெரிய பிரச்சனையாகி ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத நிலை உருவாகி தன் உடன்பிறப்புகளையே பல ஆண்டுகள் பார்க்காத பேசாத நிலை சில இடங்களில் உள்ளது. சிந்திப்போம். நாம் நம்மையே மாற்றிக்கொள்வோம். என் மனதில் பட்டதை நான் சொல்லி உள்ளேன். மாற்று கருத்து உடையோர் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் வாய்ப்பு குறைவு

அசைவ உணவு சாப்பிடுபவர்களைவிட சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவு என நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.

சைவ உணவில் முக்கிய இடம் பிடிக்கும் காய்கறிகளில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளை அழிக்கும் சக்தி கொண்ட பொருள்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

வெங்காயம் மஞ்சள் மற்றும் இஞ்சி ஆகியவற்றில் நோய் எதிர்ப்பு திறன்கொண்ட சத்துக்கள் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அசைவ உணவு வகைகளில் நோய் எதிர்ப்பு கொண்ட சத்துக்கள் மிக குறைவாக உள்ளன.

மனிதர்கள் சைவ உணவுகள் சாப்பிடுவதால் நோய் எதிர்பபு திறன் கூடுகிறதா என்பது குறித்து பிரான்சை தலைமையிடமாக கொண்ட சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கனடாவை சேர்ந்த உலக சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு ஒன்றை துவக்கி உள்ளது.

இந்த ஆய்வு இரண்டரை லட்சம் பேரிடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.