Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

தாய் தரும் தவறான அறிவுரை.

ஒருசில அம்மாக்கள் திருமணம் ஆனவுடன் தங்கள் மகள்களின் வாழ்வில் தேவையில்லாமல் தலையிட்டு பிரச்சினையை பெரிதாக்குகின்றனர். பிரச்சினையே இல்லாவிட்டாலும் புதிதாக உண்டுபண்ணுகின்றனர். நல்ல உறவுகளே கிடைத்தாலும் ஒரு சிலர் அதை புரிந்து கொள்ளாமல் அலட்சியப்படுத்துகின்றனர். தாய் தந்தையரே நிரந்தரம் அல்ல. எல்லா உறவுகளும் நமக்கு தேவைதான். அதை நிறைய பேர் உணர்வதில்லை.

கணவனின் உறவினர்கள் நம் மீது கொண்டுள்ள அன்பை நிறைய பேர் புரிந்துகொள்வதேயில்லை. நம் அம்மாவே தவறான அறிவுரை கூறினாலும் மகள் ஆனவள் சிந்தித்து நல்ல முடிவை எடுக்கவேண்டும். தன் குடும்ப விவரங்களை வெளியில் சொல்வது நல்லதல்ல. நிறைய திருமணமான பெண்கள் இதை கடைபிடிப்பதில்லை.

நல்ல கணவனை தவறான அறிவுரைகளால் இழந்தவர்கள் ஏராளம். உறவு வட்டங்கள் விலகிப்போவதும் இதனால்தான். சிறிய மனக்கசப்பு பெரிய பிரச்சனையாகி ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத நிலை உருவாகி தன் உடன்பிறப்புகளையே பல ஆண்டுகள் பார்க்காத பேசாத நிலை சில இடங்களில் உள்ளது. சிந்திப்போம். நாம் நம்மையே மாற்றிக்கொள்வோம். என் மனதில் பட்டதை நான் சொல்லி உள்ளேன். மாற்று கருத்து உடையோர் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

அன்பு குறைபாடும் குற்றங்களும்

அன்பு குறைந்திருக்கும்போது குற்றங்கள் பெரிதாகப்படுகின்றன. நாம் அன்பு செய்கிறவர்கள் ஏதாவது தவறு செய்தார்கள் என்றால் கூட நாம் அதை மிகைப்படுத்தமாட்டோம். ஆனால் நாம் அன்பு செய்யாதவர்கள் சிறு தவறு செய்தாலும் கூட அதைபெரிதுபடுத்தி பேசுவோம்.

இதை உறவுமுறைகளிலும் காணலாம். நம் மகனோ பேரன் பேத்தியோ எது செய்தாலும் சரி என கருதும் நாம் நமக்கு பிடிக்காத மற்ற உறவினர்கள் சரியாகவே செய்தாலும் அதை தவறு என்று கூறுவோர் உள்ளனர். காரணம் அன்பு குறைபாடே ஆகும்.

இயேசு தன்னைக்கொன்றவர்களை கூட மன்னித்து ”தாம் செய்வது இன்னது என்று அறியாமல் செய்கிறார்கள்” என்றார்.
இது அன்பின் மிகுதியைகாட்டுகிறது.

அன்னைத் தெரசா தனக்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து காத்துவந்தார். இதுவும் அன்பின் மிகுதியான நிலை.

வள்ளலார் வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார். பயிர் வாடுவதையே பொருக்காத வள்ளலார் எங்கே. மனிதர்களின் மனங்களை வாட செய்து சந்தோசம் அடையும் நாம் எங்கே.

நிறைய பிரச்சனைகள் தோன்றுவதற்கு இந்த அன்பு குறைபாடே காரணம். அன்பு குறைபாட்டை நீக்கி அன்பை பெருக்கி கொள்வோம்.

அன்றும் இன்றும்

ஏங்க இங்க பாருங்க உங்களத்தான்

என்ன என்றான் சுகுமார்.

பக்கத்து வீட்டு மாலா நிலம் வாங்கிட்டாங்க. பெரிய ரியல் எஸ்டேட் வியாபாரிகிட்டங்க. முதல்ல லட்சம் ரூபா கட்டினாப் போதுமாம். அப்புறம் மாசாமாசம் தவணைல கட்டலாமாம் நல்ல திட்டமா இருக்குங்க. நாமாளும் வாங்கலாங்க.

இப்ப லட்ச ரூபாய்க்கு எங்க போறது.

கடனை கிடனை வாங்கி வாங்கலாங்க. கடன் என்ற வார்த்தையே பிடிக்காது சுகுமாருக்கு.

அதல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது. வாங்கறதார்ந்த மொத்தகாசும் குடுத்து வாங்கனும். சும்ம தொண தொணங்கதா.

நான் சொல்லி எத நீங்க கேட்டு இருக்கீங்க. ம் எல்லாம் என் தலையெழுத்து.

இதைச்சொல்லிசொல்லியே புலம்பிக்கொண்டிருந்தாள் 3 மாதகாலமாக.

சுகுமார் அன்று லேட்டாக வீட்டிற்கு வந்தான்.

என்னங்க உங்களுக்க விசயம் தெரியுமா?

என்ன என்றான்.

அந்த REAL ESTATE வியாபாரி மொத்த பணத்தையும் சுருட்டிட்டு ஓடிட்டானாங்க. TV News ல சொன்னாங்க.

நல்லவேல நாம தப்பிச்சோம். வாங்கியிருந்தா 1 லட்சரூபா போயிருக்கும் என்றாள். நீங்க வாங்கவேணா சொன்னது நல்லதாப்போச்சு என்றாள் சந்தோசமாக.

முற்றும்

நன்றி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

சுயநலத்தின் உச்சங்கள்.

உண்மைச்சம்பவங்கள்.

சம்பவம்-1



இது சென்ற வருடம் நடந்த உண்மை சம்பவம்(நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம்). தன் பழைய காதலுக்காக மெத்த படித்த கணிப்பொறி துறையில் பணியாற்றிய மாதம் 3 லட்சத்திற்கு மேல் சம்பாதித்த மேதாவி ஒருவர் தன் மனைவியை(மனைவி பெங்களுர் IBM ல் 60000 ஊதியத்திற்கு வேலை செய்து கொண்டு இருந்தாராம்) இரும்புகம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு யாரோ கொன்றதுபோல் நாடகமாடி பின் அகப்பட்டுகொண்டார். இத்தனைக்கும் அவருடைய பழைய காதலி ஒன்றும் திருமணமாகாமல் இல்லை. திருமணமாகி விவாகரத்து வாங்கினவராம்.(இது எப்படி இருக்கு பாருங்க அந்த அம்மணிகிட்ட மாட்டின அப்பாவி யாரோ)

சம்பவம்-2



இது 2006ம் ஆண்டு மூணாறில் நடந்த சம்பவம். திருமணமான சில நாட்களிலே கணவனை தன் பழைய காதலன் துணையுடன் கொன்றாள் வித்யா என்கிற பெண். நகைகளுக்காக யாரோ கொன்றார்கள் என்று நாடகமாட எண்ணியிருக்கிறார்கள். பின் மாட்டிக்கொண்டார்கள்.

இதுபோல எத்துணை எத்துணையோ தினசரி பத்திரிகைகளில் வாசிக்கிறோம். இது போன்ற நபர்களுக்கு பிறர் உயிரை பறிக்கும் அதிகாரத்தை வழங்கியது யார். தனக்காக தன் சுயநலத்திற்காக அடுத்தவர் உயிரை எடுக்கும் அளவிற்கு விஷவிருட்சம் அவர்கள் மனதில் விதைத்தது யார்.

முதல் சம்பவத்தில் திருமணத்திற்கு முன்னமே தனக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறி இருக்கலாம். அல்லது திருமணம் நடந்த பிறகாவது அந்த பெண்ணிடம் தன் பழைய காதலை கூறி விவாகரத்து வாங்கிக்கொண்டு இருக்கலாம். அந்தப்பெண் உயிருடன் தன் சம்பாத்தியத்தில் வாழ்ந்திருப்பாள். எதுவுமே செய்யாமல் தானும் இப்போது கம்பி எண்ணிக்கொண்டு மனைவியையும் வாழவிடாமல் செய்துவிட்டான் அந்த சுயநலமி.


இரண்டாவது சம்பவத்திலும் அப்படியே இந்த மெத்த படித்த இது போன்று வாழ்க்கையை படிக்காமல் தானும் கெட்டு பிறர் வாழ்க்கையும் கெடுக்கும் சுயநலத்தின் உச்சங்கள் திருந்துவார்களா?

உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே தீரணும் தப்பு பண்ணவன் தண்டனை அனுபவித்தே தீரணும் இதுதான் உலக நியதி.

தனக்கோ பிறருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ மனத்தளவிலோ உடலளவிலோ துன்பம் விளைவிக்காத செயல்களே ஒழுக்கம் என வரையறுக்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

நன்றி

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.

.

சங்கராந்தி(சிந்தனை)

சங்கராந்தி என்ற தெலுங்கு படம் பார்த்தேன்(பழைய படம்தான்). அந்த படம் தமிழிலும் வந்துள்ளது பெயர் தெரியவில்லை. பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாட்டு வருமே அந்த படம்(படம் பெயர் தெரிந்தவர்கள் சொல்லவும்).

இப்போது தெரிந்து விட்டது.. அந்த படத்தின் பெயர் ஆனந்தம்.


மிக அருமையான படம். குடும்பக்கதை மிகவும் நன்றாக உள்ளது.
அதில் உள்ள மூத்த சகோதரன் தன் சகோதரர்களின் நலனுக்காக மற்றும் குடும்ப நலனுக்காக உழைக்கிறான். அதனால் தாமதமாக திருமணம் செய்து கொள்கிறான். அதனால் அவனுக்கு குழந்தையில்லை(தாமத திருமணத்தால்).

அதில் மூத்த சகோதரனின் பெயர் ராகவா. அவனுக்கு திருமணம் ஆகவில்லையென அவனுடைய தாய் மிகவும் கவலைப்படுகிறாள். நிறைய பிரார்த்தனைகள் செய்கிறார். திருமணம் செய்ய மறுக்கும் மூத்த சகோதரன் சிநேகாவைப் பார்த்ததும் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டு திருமணம் நடக்கிறது.

எனக்கு தெரிந்த குடும்பம் ஒன்று உள்ளது. அதிலும் இதேபோல் நான்கு சகோதரர்கள் இருக்கிறார்கள். மூத்தவனுக்கு திருமணம் ஆகிவிட்டது(தாமதத் திருமணம்தான்).

நல்ல பழக்கங்கள் உள்ளவர்கள் நால்வரும். அந்த நல்ல பழக்கங்களுக்கு காரணம் அவர்களின் பெற்றோரே. பிள்ளைகள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை அப்படியே அன்னையிடம் தந்துவிடுகிறார்கள். மற்ற மூவரும் திருமண வயதை நெருங்குகிறார்கள். ஆனால் அந்த அன்னையும் தந்தையும் பிள்ளைகளின் திருமணத்தைப் பற்றி கவலையேபடுவதில்லை. அவர்களுக்காக எதுவும் சேமிப்பதுமில்லை. தேவையோ இல்லையோ தான் நினைத்த பொருட்களை வாங்கிவிடுவது. ஆடம்பர வாழ்க்கை வாழவேண்டும் என நினைப்பது. எவ்வளவு பணம் வந்தாலும் ஏதாவது செலவு என்றால் தன்னிடம் எதுவுமே இல்லை என்று சொல்வது இது அவரின் வாடிக்கை.

மூத்த சகோதரன் நல்லது சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை. நான் உங்களுக்காக எதுவும் சோ்த்துவைக்கவில்லையா என்ன?
அங்கங்கே எவ்வளவு கடன் வைச்சிருக்காங்க என்று பாரு என்கிறார் பதிலுக்கு. கடன் எதுவும் வைப்பதில்லையாம் அது அவர்களுக்கு பெரிய விசயமாம்.

தள்ளிப்போகும் திருமணங்கள் பற்றி ஒரு பதிவு படித்தேன். தள்ளிப்போகும் திருமணங்களுக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் பெற்றோரின் அக்கறையின்னை மற்றும் சுயநலமும் ஒரு காரணம் என்பது என் கருத்து.

பணத்தின் மீதுள்ள ஆசை எல்லா தீங்கிற்கும் காரணமாகிறது என்று படித்திருக்கிறேன். பணத்தின் மீதுள்ள ஆசை பாசத்தையும் மாற்றிவிடுகிறது. நம் பிள்ளைகளின் வாழ்க்கை வீணாவதற்கு நாமே காரணமாக இருக்கலாமா?. யோசியுங்கள் பெற்றோரே.

பிள்ளைகளும் பெற்றோரையும் கவனிக்கவேண்டும் அதே சமயம் தங்கள் வாழ்க்கைக்காகவும் சிறிது சேமித்து வைத்துக்கொள்வது நல்லது. அதேசமயம் பெற்றோரையும் மறந்துவிடக்கூடாது. அவர்களுக்கும் தேவையான அனைத்தையும் செய்யவேண்டும்.
உழைப்பது ஒருவரென்றால் அதை உழைப்பின் அருமை தெரியாமல் அனுபவிப்பது வேறோருவராக இருந்துவிடக்கூடாது.

முதிர்கன்னிகளைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கும் சமூகம் முதிர்காளைகளைப்பற்றி எப்போது சிந்திக்கப்போகிறது. ஆண் எப்போ கல்யாணம் பண்ணிட்டால் என்ன என்ற சிந்தனை வேறு.
ஆணாகயிருந்தாலும் பெண்ணாகயிருந்தாலும் சரியான வயதில் திருமணம் முடிப்பதே சிறந்தது. தாமதமாய் திருமணம் செய்துகொண்டு அப்புறம் குழந்தையில்லையே என்று வருத்தப்பட்டால் என்ன பயன்.

குழந்தையின்மை சிகிச்சைமையங்கள் தற்காலத்தில் பெருகிவிட்டன. குழந்தையின்மைக்கு பலகாரணம் இருந்தாலும் தாமதத்திருமணங்களும் ஒரு காரணம்.


சிந்தியுங்கள்.

நன்றி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.

மருமகள்.(சிந்தனை)

கல்யாணி கல்யாணி என அழைத்துக்கொண்டே உள் நுழைந்தாள் அவள் தோழி பங்கஜம்.

என்ன பங்கஜம் என்றாள் கல்யாணி.

இருவருக்கும் 50 வயதிருக்கும். பல வருடங்களாக தோழிகள்.

சாயந்திரம் பக்கத்து வீட்டு விமலாவுக்கு நிச்சயதார்த்தமில்ல அதான் நியாபக படுத்திட்டு போலான்னு வந்தேன்.

சீக்கிரம் கிளம்பிடு.

நான் எங்கிருந்து சீக்கிரம் கிளம்பறது. எல்லா வேலையும் செஞ்சிட்டில்ல வரணும்.

அதுதான் மருமக இருக்கால்ல. அவ பார்த்துக்க போற.

அவ என்னத்த பாத்துப்பா. எல்லா வேலையும் நான்தான் செய்யனும்.

ம் எல்லாம் என் தலையெழுத்து..

கல்யாணியின் மருமகள் வசுமதி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள். கொழுந்தன் டிவி பார்த்துக் கொண்டிருக்க தானும் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவள் தானாக டிவியை ஆன் செய்வதில்லை. யாராவது பார்த்தால் கூட அமர்ந்து பார்ப்பதுதான்.

அந்த வீட்டில் எல்லாம் கல்யாணியின் ஆட்சிதான். வசுமதிக்கு வேலை செய்யக்கூடாதென்ற எண்ணமில்லை.


ஒருநாள் அப்படித்தான் சாம்பாருக்க புளி ஊற வைத்திருந்தார்கள் அவளுடைய மாமியார். வெளியில் ஏதோ முக்கியமான வேலையாக அவரின் தோழியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

அவர்கள் வருவதற்கு நேரமாகும் என்பதால் வசுமதி புளி கரைத்து ஊற்றிவிட்டாள். வந்தபின் ஏன் இப்போது ஊற்றினாய். என ஒரெ வசவுதான். காய் நல்லா வெந்தபிறகு ஊற்றனும். காய் நன்றாக வெந்துவிட்டது. ஆனாலும் அவள் குணம் அப்படித்தான்.தான்மட்டும் தான் அந்த வீட்டில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கல்யாணிக்கு.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல பல பல நிகழ்வுகள். எனவே வசுமதி ஒரு முடிவுக்கு வந்து விட்டாள். சமையல்வேலையில் தான் ஏதாவது செய்ய நினைத்தால் அது அவளின் மாமியாருக்கு பிடிக்காது. மற்ற வேலைகள் மட்டும் செய்வாள் வசுமதி. துணி துவைப்பது. பாத்திரம் கழுவுவது போன்றவை.


செய்யவும்விடமாட்டார்கள் அதே சமயம் தான்தான் எல்லா வேலையும் செய்கிறேன் யாரும் உதவி செய்வதில்லை என்று சதா புலம்பிகொண்டே இருப்பார்கள். அவர்களின் குணம் அப்படி


என்னதான் செய்வாள் வசுமதி.

அவள் கணவன் சுகுமாரும் அம்மாவுக்கு கூடமாட உதவி செய்யலாமில்லை என்பான். அவங்க என்ன எதுவும் செய்யவிடமாட்டாங்கங்க என்பாள்.

அவளுடைய கொழுந்தன்மார்களுக்கும் அண்ணிக்கு எந்த வேலையும் தெரியாது போல என்ற எண்ணம் வருமளவிற்கு செய்திருந்தாள் கல்யாணி.


மாமனார் நடேசன் தன் மனைவிக்கு எது சொன்னால் பிடிக்குமோ அதையேதான் சொல்வார். தன் மனைவிக்கு மருமகளை திட்டினால் பிடிக்கும் என்பதால் சிறு குறையையும் பெரிதுபடுத்தி பேசுவார்.

அவருக்கு தன் மனைவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே. ஏனென்றால் அங்கு கல்யாணியின் ஆட்சி அல்லவா நடக்கிறது.

கல்யாணம் ஆனதிலிருந்து இப்படித்தான். ஆனால் வசுமதியின் கொழுந்தன்கள் அப்படில்ல. அவர்களுக்கு அண்ணி என்ற பாசம் ஒரளவிற்கு இருந்தது. தன் அப்பாவே ஏதாவது தவறு செய்தால் கூட எடுத்து சொல்லுமளவிற்கு இருந்ததார்கள்.

வசுமதியின் கணவன் சுகுமாரும் மிகவும் நல்லவன். அவர்கள் வயதானவர்கள் எது சொன்னாலும் நீ பொறுமையாக இரு என்பான். வசுமதியும் அப்படித்தான் பொறுமையாக இருந்தாள். எல்லா வசவுகளையும் தாங்கிக் கொண்டாள்.

இதற்குத்தான் வேண்டாத மருமகள் கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என்று பழமொழியே உள்ளது போல.

காலம் எல்லாவிதமான காயங்களுக்கும் மருந்து என்று மனதைத்தேற்றிக் கொண்டாள் வசுமதி.


வசுமதியை மட்டுமல்ல மூத்த மருமகள் நித்யாவையும் இதேபோல நடந்துகொண்டு தனியே அனுப்பிவிட்டாள் கல்யாணி.

ஆனால் பேரன் பேத்திகளிடம் மட்டும் பாசத்தை பொழிகிறாள் அதே கல்யாணி.

உலகில் ஆயிரமாயிரம் வசுமதிகள். எந்த உறவுவாயினும் நாம் உண்மையான அன்பை பொழிந்தால் அவர்களும் உண்மையான அன்பைபொழிவார்கள். புரிந்துகொள்வார்களா கல்யாணியைப் போன்றவர்கள்.

மூத்தோர் காட்டும் வெறுப்புதான் நிறைய தனிக்குடித்தனங்கள் மற்றும் பல பிரச்சனைகள் தோன்றகாரணம். இளைய தலைமுறையையே அனைத்திற்கும் குறை சொல்லாமல் தாங்களும் தங்கள் குறைகளை திருத்திக் கொள்ளவேண்டும் மூத்த தலைமுறை.

நன்றி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

.

Blog Archive